Home > Author > S. Ramakrishnan

S. Ramakrishnan QUOTES

5 " நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"

ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,

"நாம் எங்கே செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது. "

S. Ramakrishnan , உப பாண்டவம் [Uba pandavam]

8 " பழந்தமிழ் ஆய்வாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்றைய ஜெராக்ஸ் எனும் நகலெடுப்பு போல, இருநூறு வருடங்களுக்கு முன்பாக, ஒரு ஏட்டிலிருந்து நகல் எடுத்து இன்னொரு ஏட்டில் எழுதித் தருவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் வசித்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயர். அப்படி நகல் எடுத்து எழுதுபவர், தான் பிரதி எடுத்த ஏட்டின் கடைசிப் பாடலுக்குக் கீழே தனது முத்திரையாக, தனது பணியானது தமிழுக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு செய்யும் சிறு ஊழியம் என்று ஒப்பமிட்டு, அதன் கீழே தனது பெயரையும், ஊரையும் தெரிவிக்கும் முறை இருந்தது’’ என்றார். "

S. Ramakrishnan , தேசாந்திரி [Desanthiri]

17 " சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும்.
வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா?
ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது.
அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான். "

S. Ramakrishnan , சஞ்சாரம் [Sancharam]

18 " வேம்பின் காற்று எங்கிருந்தோ மழையைக் கொண்டுவந்தது. வேம்புதான் அவர்களைக் காப்பாற்றியது.
வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன.
வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள். "

S. Ramakrishnan , சஞ்சாரம் [Sancharam]